இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 22, 2024
நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை:
நாட்டிலேயே தமிழக கல்வித்துறை தலைசிறந்து விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம், ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம், ரூ.101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள், ரூ.1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் என கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது.
புரட்சிகரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழகம் தொடங்கியுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வெற்றிகரமாக துவக்கி வைக்கப்பட்டது.
முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-NFHS-5ன் படி இரத்த சோகை அதிகமாக காணப்பட்ட மாவட்டங்கள், தொலைதூர கிராமப் பகுதிகளில் மாநில சமநிலை வளர்ச்சி நிதி தரவுகளின் படியும் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியின் அடிப்படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்:
தொற்றுநோய் சூழ்நிலைகளால் உளவியல் சிக்கல்களுடன் கற்றல் இழப்பை சந்தித்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களைத் தொடங்கியது.
இந்த வகையில் தொடங்கியது தான் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம். இத்திட்டங்கள் மூலம், அரசு கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இல்லம் தேடி கல்வி திட்டமானது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களை போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டது.
அனைத்து அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடி நலப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டது.
அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அறையுடன்கூட வளர்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சர்வதேச கலாச்சார பன்முகத்தன்மைக்கான பேச்சு வார்த்தை மற்றும் வளர்ச்சி தினம்: மே 21
2001 – ஆம் ஆண்டு கலாச்சார பன்முகத்தன்மை மீதான உலகளாவிய பிரகடனத்தை யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டது.
2002 – ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா பொதுச் சபையானது மே 21 ஆம் தேதியை சர்வதேச கலாச்சார பன்முகத் தன்மைக்கான பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சி தினமாக அனுசரிக்கிறது.
தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் & ராஜிவ் காந்தி நினைவு தினம்: மே 21
1991 – ஆம் ஆண்டு மே 21 அன்று இந்தியாவின் ஏழாவது பிரதமரான ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வி.பி.சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசாங்கம் மே 21 ஆம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் : மே 22
ஐ.நா. ஆனது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக மே 22 ஆம் தேதியை சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினமாக அறிவித்தது.
தகவல் துளிகள்:
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதற்குத் தடை விதிப்பதற்காக ரஷியா கொண்டு வந்த வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரித்தது.
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் டி.மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கம் வென்றன.
தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய திறன் மேம்பாட்டு கழத்தின் சார்பில் நடைபெற்ற “India Skills 2024” போட்டியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் – “நான் முதல்வன்” திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 40 பதக்கங்களை கைப்பற்றி தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.